
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் வகையில் சமகி ஜன பலவேக எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இதன்படி, பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு குறித்த மனு ஜூன் 8 ஆம் திகதி விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி பிரதிவாதிகள் தம்மை சபையில் இருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளதாக மனுதாரர் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அத்தோடு,குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு முன்னர் பிரதிவாதிகள் எந்தவொரு நியாயமான ஒழுக்காற்று விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நீதியின் சட்டக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
மேலும், சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.