
கடமையின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (04) கிரிதலே வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக சுமார் 1050 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான அமெரிக்க உதவியும் (USAID) பெறப்பட்டுள்ளதோடு கடமைக்காக தமது வாழ்வை அர்ப்பணிக்கும் உத்தியோகத்தர்கள் கடமைக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், குறித்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, புதிதாக திறக்கப்பட்டுள்ள வனவிலங்கு பயிற்சி நிலையம் பொலன்னறுவை மாவட்டத்திற்கே தனித்துவமான வளமாகும் எனவும் குறித்த பயிற்சி நிலையத்தை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்றுவிக்கும் மட்டத்திற்கு பேண முடிந்தால், எமது நாட்டின் வனவிலங்கு வளங்களை பயன்படுத்தி நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.