
தோட்டாக்கள் ஏற்றப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்திற்கு வந்த விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் நேற்று மதியம் கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கி புறப்படவிருந்த விமானம் நான்கு மணித்தியாலம்
தாமதத்தித்து புறப்பட்டதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சேவை துப்பாக்கியை விமானத்திற்கு வெளியே எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான AI 272 விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை ஏந்தியவாறு விமானத்தின் பிரதான விமானியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்திற்கு வந்துள்ளார்.
குறித்த நபர் இந்தியாவின் விசேட அதிரடிப்படையின் அதிகாரி என தெரிவிக்கப்படுவதோடு துப்பாக்கியுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி குறித்த பாதுகாப்பு அதிகாரியின் அனைத்து பதவி உயர்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.