
தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகக் குறிப்பிட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதன்படி, தேஷ்பந்து தென்னகோன் முன்வைத்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இந்நிலையில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றில் தமது பக்க நியாயங்களை முன்வைத்து, இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட கடிதம் மனுதாரரை இலக்கு வைத்து வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால் வழக்குக்கு எதிரான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட ஆட்சேபனைகளை மே 24ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மே 31ம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதன்பிறகு, மனு மீதான விசாரணை ஜூன் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை சந்தேக நபராகக் குறிப்பிட்டு கடந்த 19ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் கடிதம் அனுப்பியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதன் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சந்தேகநபராகப் பெயரிடுவது குறித்து பொலிஸாரே தீர்மானிக்க வேண்டுமெனவும், சட்டமா அதிபருக்கு அவ்வாறான தீர்மானம் எடுக்க அதிகாரம் இல்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமா அதிபரின் நடவடிக்கை அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், சட்டப்படி செல்லுபடியாகாது என்றும், இது இயற்கை நீதி மற்றும் அடிப்படை உரிமை கோட்பாட்டை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடிதம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும், தம்மை கைது செய்வதை தடுக்குமாறும் மனுதாரர் தேஷ்பந்து தென்னகோன் நீதிமன்றில் மேலும் கோரியுள்ளார்.
இதன்படி, குறித்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்தது.