
பல்வேறு தரப்பினரும் இனவாத மற்றும் மத முரண்பாடுகளை உருவாக்க முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜெரம் பெர்னாண்டோ என்ற போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், ஜனாதிபதியின் அறிக்கையின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.