
222 புதிய குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் நேற்று (16) இடம்பெற்றது.
இதன்படி, இந்த நியமன வெற்றியாளர்களை அடையாளப்படுத்தும் வகையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பத்து புதிய பெண் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
அவர்களில் 49 பேர் வரி அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கும், மேலும் 173 பேர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் மற்றும் மாகாண சபைகளுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
அத்தோடு, ஒன்றரை வருடங்கள் பயிற்சி பெற்ற இக்குழுவினருக்கு மேலதிகமாக 1000 பேர் கொண்ட மற்றுமொரு குழு தற்போது பயிற்சி பெற்று வருவதுடன் எதிர்காலத்தில் புதிய நியமனம் பெற்றவர்களாக சுகாதார சேவையில் இணைந்துகொள்ள உள்ளனர்.
மேலும், தற்போது 8753 பெண் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் இலங்கையில் பணியாற்றி வருவதோடு மருத்துவமனைகள், மகப்பேறு கிளினிக்குகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கண்காணிப்பு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், சுகாதாரக் கல்வி போன்றவற்றில் குடும்ப சுகாதார சேவை அலுவலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல ” கடந்த காலங்களில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக சமூகத்திற்கு பெரும் சேவையாற்றப்பட்டதாகவும் குறிப்பாக கிராம மட்ட கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கிராமத்துடன் இணைக்கப்பட்டதாகவும்
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பணிக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான பணி எனவும், கிராம மட்டத்தில் அந்த அதிகாரிகள் நடைமுறையில் மேற்கொள்ளும் செயற்பாடானது ஒரு பல்கலைக்கழகத்திற்கு அப்பால் அறிவை சேகரிக்கும் செயலாகும், இதில் பல அனுபவங்கள் பெறப்படுகின்றன என்றும் ஊதியத்திற்காக ஒரு வேலையைச் செய்வதற்கும் திருப்திக்காக ஒரு வேலையைச் செய்வதற்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதாகவும், இதுபோன்ற பல குணங்களையும் மதிப்புகளையும் இதுபோன்ற சேவைகள் மூலம் சேர்க்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டின் பொருளாதாரம் தற்போது பல சவால்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் இவ்வாறான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் அரசாங்கம் எப்போதும் அதிக கவனம் செலுத்துவதாகவும் சுகாதாரத் துறைக்கு வேறு தெரிவுகள் இல்லை எனவும் அதற்கேற்ப அத்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேலதிக செயலாளர்களான கீதாமணி கருணாரத்ன, வத்சலா பிரியதர்ஷனி, பிரதி பணிப்பாளர் நாயகம் (கட்டுப்பாடு) வசந்தி குணசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.