
களுத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள ஐந்து பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 38 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, பயாகலை, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நேற்று இரவு சுமார் 06 மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நடவடிக்கையின் போது வடக்கு களுத்துறை, தெற்கு களுத்துறை மற்றும் கட்டுகுருந்த புகையிரத நிலையங்களும் பரிசோதிக்கப்பட்டன.
வடக்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு இரவு 10.50 மணியளவில் வந்த அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதத்திலும் பொலிஸார் நுழைந்து அதில் இருந்த பயணிகளை சோதனையிட்டுள்ளனர்.
குறித்த புகையிரதத்தில் இருந்து வந்து கட்டுகுருந்த நிலையத்தில் இறங்கியவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு இந்த நடவடிக்கையில் பெண் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஐந்து பிடியாணை கைதிகளும் மற்றும் 16 சந்தேக நபர்கள் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.