
ஜூலை முதலாம் திகதி முதல் பல துறைகளுக்கான மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, 0-30 வீட்டு மின்சார யூனிட் பயன்படுத்துவதற்கு ஒரு யூனிட் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜூலை முதல், குறிப்பிட்ட வீட்டு உபயோகக் குழுக்களுக்கான உள்ளூர் நிலையான கட்டணங்கள் 400 ரூபாய் முதல் 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வீட்டு மின் கட்டணம் குறைந்தது 23% குறைக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதுடன் 31 முதல் 60 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் 09 சதவீதத்தால் குறைக்கப்படும் என்றும், 0 முதல் 60 யூனிட் வரை 07 சதவீதத்தால் குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 0 முதல் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களில் குறைந்தபட்சம் 23 சதவீத மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதம் முதல் 29% முதல் 40% வரை குறைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பாராளுமன்ற பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.