
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 75 இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்தி இன்று அதிகாலை சுங்கத் தலைமையகத்திலிருந்து வெளியாகியுள்ளார்
இதன்படி, அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 3 கிலோ 500 கிராம் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் துபாயில் இருந்து நாட்டிற்கு வந்தடைந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ஏழு கோடியே எண்பத்தி இரண்டு இலட்சம் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் சுங்க வருமான பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட 75 இலட்சம் ரூபாவை செலுத்திய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று அதிகாலை சுங்கத் தலைமையகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.