
டிஜிட்டல் மயமாக்கலில் ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு.
இதன்படி, நாட்டில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அண்மைக்காலமாக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளதோடு “இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஜப்பானிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நேற்று (26) காலை டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், JETRO ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு சங்கம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியன இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததுடன் இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் திறப்பதற்குமான புதிய சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருளாதார பங்காளியாக ஜப்பானின் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரித்துள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பல பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவை ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிராந்தியத்தில் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான கதவுகளைத் திறக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதோடு இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு இந்த வணிக வட்ட மேசை கலந்துரையாடல் முழுவதும் நன்கு உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பான்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்துடன் சந்திப்பில் கலந்துகொண்டார்.
ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதோடு இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தினார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதிப் பிரதமர் Trần Lưu Quang அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் டோக்கியோவில் இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தினர்.