
2021 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கரிம மற்றும் இரசாயன உரங்களுக்கு கடனாக விவசாய அமைச்சு உரிய உர விநியோகஸ்தர்களுக்கு பாரிய தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 20,000 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடனை செலுத்துவதற்கு தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, ஒரு வருடத்தில் 18,000 மில்லியன் ரூபா கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கடன் தொகையில் 2000 மில்லியன் ரூபா மாத்திரமே செலுத்தப்பட உள்ளதாகவும் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற உர விநியோக செயல்முறை தொடர்பான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டு யாழ் பருவத்தில், அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்தாததால் தனியார் துறையினர் யூரியா உர மூட்டையை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு விற்றதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையில் 90 வீதத்திற்கும் அதிகமான தொகையை அரசாங்கம் செலுத்தியுள்ளமையினால் யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 10,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்ததோடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு 31,200 மெட்ரிக் தொன் யூரியா உரம் கையிருப்பு கிடைக்க உள்ளதாகவும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை குறைப்பு என்பவற்றின் நன்மை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, யூரியா உர மூட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.