
தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வீட்டை விட்டு ஓடி ஹட்டன் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் இன்று (19) அதிகாலை ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பில் உள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் பயணித்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் இன்று (19) அதிகாலை ஹட்டன் புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கி நிலையத்தில் காத்திருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, தனது பெற்றோர் அனுராதபுரத்தில் வசிப்பதாகவும், தனது குடும்பத்தில் மூத்த சகோதரனும் சகோதரியும் இருப்பதாகவும் பாடசாலை மாணவர் தெரிவித்துள்ளதுடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து தான் பாடசாலை கல்வியை பெற்றதாகவும், 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் போது பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிலும், பாணந்துறையில் உள்ள தனது பாட்டி வீட்டிலும் தங்கியிருந்த போது, தனது தந்தை வந்து தன்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி கொடூரமாக தாக்கியதாகவும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயிலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பாடசாலை மாணவனின் முதுகில் பல காயங்கள் இருப்பதாகவும் இதன் காரணமாக மாணவன் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதக்கவும் குறித்த மாணவனை திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மருத்துவ அறிக்கையின் பின்னர் பாடசாலை மாணவனை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கஉள்ளதாகவும் , பாடசாலை மாணவனின் பாதுகாவலர்களை ஹட்டன் பொலிஸாருக்கு வருமாறும் ஹட்டன் பிரதான பொலிஸ் பரிசோதகர் பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.