
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையில் 151 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவற்றில் 67 காட்டு யானைகள் மனித நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 06 யானைகள் “ஹக்கபத்துஸ்” வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டில்,நாட்டில் 433 யானை மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கையில் தற்போது சுமார் 7,000 காட்டு யானைகள் வாழ்வதக்கவும் தெரிவித்துள்ளது.
ஆனால் நாட்டில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்த மதிப்பீட்டை விட குறைவாக இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இலங்கையில் அமுலில் உள்ள வனவிலங்கு சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் வலுவாக இருந்தாலும், அந்த சட்டங்களை அமுல்படுத்தும் முறை மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக சுற்றாடல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்தும் வகையில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மட்டும் 490 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு 4,756 கிலோமீற்றர் யானை வேலியை அமைத்துள்ளது.