
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர்களுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் நேற்று (21) அழைப்பு விடுத்திருந்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.சி.மெதவத்த, விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொலையாளிகள் தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர், ஜனாதிபதியிடம் இது தொடர்பான சான்றிதழை பெற்றுள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகளில் எவருக்கும் தேவையற்ற செல்வாக்கு செலுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறிப்பாக தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் அந்த இரண்டு மாகாணங்களிலும் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அத்தகைய அதிகாரிகளை உடனடியாக நீக்கி உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.