
உலக வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான மேம்பாட்டுக் கொள்கை நிதியளிப்பு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் ஆதரவைப் பெறுவது குறித்து கடந்த மே 17ஆம் திகதி விவாதம் நடைபெற்றதுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான 371 மில்லியன் மற்றும் 2 பத்தில் சிறப்பு கொள்வனவு உரிமைகளை இரண்டு தவணைகளில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தேச நிதி வசதிக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு அந்த நிதி வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.