
வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி காடுகளை அகற்றுவது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியது.
இதன்படி,குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி இருந்த நிலையில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பான ஆட்சேபனைகளை ஜூலை 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்பிறகு, மனுவை பரிசீலிக்க ஆகஸ்ட் 28 ஆம் திகதி கூடுமாறு பெஞ்ச் உத்தரவிட்டது.
இதேவேளை, சுற்றுச்சூழல் நீதி மையம் குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளதுடன் வில்பத்து வனப்பகுதியை அண்டிய மரச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி காடுகளை அகற்றுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நவம்பர் 16, 2020 அன்று தனது தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம், அழிக்கப்பட்ட காடுகளை மீண்டும் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதிவாதியான ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான காடுகளை அகற்றும் பணிக்காக 1067 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு ரிஷாத் பதியுதீனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும், அவர் இதுவரை அந்த தொகையை செலுத்தவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகவும், நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் சுற்றாடல் நீதி மையம் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது.