
உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பதில் வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு விசேட பங்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளர்.
இதன்படி, உண்மையான நிலைமையை தெளிவுபடுத்துவதன் மூலம், நாட்டின் தொழிலாளர் மற்றும் முழு மக்களிடையேயும் கடனை மேம்படுத்துவது குறித்த புரிதல் இன்மை மற்றும் தேவையற்ற அச்சம் ஆகியவற்றை நீக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சமூகத்தினரை முதலில் சந்தித்த ஜனாதிபதி, இந்த கடன் மேம்படுத்தல் திட்டத்தின் மூலம் வட்டி வீதம் குறையும், அதனால் நிதிக் கடப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வட்டி விகிதத்தை குறைக்கும் காலவரையறை குறிப்பிட முடியாத போதிலும், இன்னும் சில மாதங்களில் வட்டி விகிதங்கள் கணிசமான அளவு குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த உள்ளுர் கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாவிடின் சிறு வியாபாரிகள் பெற்றுக்கொள்ளும் கடனுக்கான வட்டி வீதம் மீண்டும் அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். .
மேலும், ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ள இவ்வாறானதொரு நிலையில் டொலரின் பெறுமதி மீண்டும் உயரும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டுக் கடன்களை மேம்படுத்துவதுடன் உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.