
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் மூலம் மொத்தமுள்ள 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு 55% மின்சார விலை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். .
இதன்படி, மின்சார விலை திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான தேவையான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அதனுடன் புதிய சப்ளையர்களின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் நிதி நெருக்கடியில் இருந்த மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது நிதி ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.