
மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை அடுத்த ஆண்டு இறுதி வரை 63 ஆக நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவை தொடர்பில் மேலதிக தீர்மானங்களை எடுக்குமாறும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையின் அடிப்படையில் செயற்படுமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு, சுகாதாரத்துறை தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, மக்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாதவாறு சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டுமெனவும், நாட்டில் கிடைக்கும் அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்கும் வகையில், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் (NMRA) திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும், தாதியர் ஆட்சேர்ப்பில் தாதியர் பயிற்சிக்கு கலைப் பிரிவு படித்தவர்களை இணைத்துக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.