
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறைந்தபட்ச இருப்புக்களை பேணவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தபட்சம் 92 ஆக்டேன் பெற்றோல் இருப்புக்கள் இல்லை எனவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 61 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் லங்கா ஆட்டோ டீசலின் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனவும் கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்தியுள்ளதோடு மேலும் பல விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.