
உள்ளூர் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து அவர்கள் இவ்வாறு தெரிவித்தமை விசேட அம்சமாகும்.
அத்தோடு, உள்ளுர் கோழித் தொழிலைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோர்களுக்கு குறைந்தபட்ச விலையில் கோழி இறைச்சியை உட்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று விவசாய அமைச்சில் நடைபெற்றதுடன் இதில் கோழிப்பண்ணை தொழிலின் முக்கிய உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கோழி இறைச்சியை இறக்குமதி செய்தால், தற்போது தன்னிறைவு பெற்றுள்ள இந்த உள்ளூர் கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடையலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியதினைத் தொடர்ந்து பதிலளித்த கோழி உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டால் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.