
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கலால் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்குமாறு கலால் ஆணையர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பம்பலப்பிட்டி, சீ மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் காரில் வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பின் போது கலால் அதிகாரிகள் குழுவினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட நான்கு கலால் அதிகாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமது அதிகாரிகளை பாதுகாக்கவுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதுடன் தேவைப்பட்டால் அந்த அதிகாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.