
கடன் மேம்படுத்தல் திட்டத்தை நிறுத்தினால் வங்கிகள் உட்பட அனைத்து துறைகளும் ஒரு வாரத்திற்குள் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடனுதவி பெறுவதற்கான செயற்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை எனவும், அதனை சீர்குலைக்க பல்வேறு நபர்கள் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடன்களை மேம்படுத்தும் செயற்பாட்டின் பின்னரே பொருளாதாரத்தின் எதிர்காலத் திட்டங்களைத் தயாரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தொழிற்சங்க அமைப்பின் 36 ஆவது வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு தனியார் துறைக்கு திறந்த பொருளாதாரம் தேவை எனவும் பொருளாதாரம் வேகமாக முன்னேற, நிதி மற்றும் மனித மூலதனம் இருக்க வேண்டும். எனவே, வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் அதிகளவானோர் நாட்டை விட்டு வேகமாக வெளியேறுவதால் பல்கலைக்கழகங்களுக்கு விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் வைத்தியசாலைகளில் போதிய வைத்தியர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
அதற்குத் தீர்வாக தனியார் துறை அல்லது ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து அல்லது கூட்டாகப் புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.