
அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்கள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவதோடு இந்த வருடம் ஜூன் 30ஆம் திகதி வரையான ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த வருடத்திற்கான சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு, அரச நிறுவனங்களுக்கு தேவையான தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வது முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, சேவை அரசியலமைப்பு, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் சுற்று நிருபங்களினால் உள்ளூர் பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டால் மாத்திரமே அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உரிய சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.