
சர்வதேச நாணய நிதியத்திற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து ஊழியர்களிடம் அறவிடப்படும் வரித் தொகையை மாத்திரமே அரசாங்கம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, செலவுக் கட்டுப்பாடு போன்ற ஏனைய துறைகளில் சிறப்பான முன்னேற்றம் காணப்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டை வழமையான பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வேலைத்திட்டம் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் தொகை தொடர்பான முதலாவது மீளாய்வை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த குழு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற தேயிலை வியாபாரிகள் சங்கத்தின் 129வது வருடாந்த பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.