
“வறுமைப் பொறி” மற்றும் “வளர்ச்சியற்ற பொறியில்” இருந்து விடுபட, சுதந்திரமான அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என சீனா வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த அவர் நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருந்து வருவதாகவும், இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்புறவுடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அடிப்படைத் தேவைகள் தொடர்பான விவகாரங்களில் சீனாவுடன் இணைந்து நிற்பதை பாராட்டுவதாக சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாக்க சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், இலங்கையுடனான இராஜதந்திர அனுபவ பரிமாற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதோடு இலங்கை தனது தற்காலிக சிரமங்களை களைந்து தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப அபிவிருத்திப் பாதையை காணும் என சீனா வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சீனாவின் நிரந்தர ஆதரவிற்காகவும், கடினமான காலங்களில் இலங்கைக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள ஆதரவை வழங்கியதற்காகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற இரு தரப்பினருக்கும் இடையிலான முன்னோக்கு ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கை மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவு தன்னிறைவை அடைவதற்கும் முக்கிய கைத்தொழில்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் இலங்கை சீனாவுடன் இணைந்து பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.