
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அன்றைய தினம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் ஸ் ஸ்ட்ராவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் விமானங்களின் போது தவிர, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உணவுக் கொள்கலன்கள், தட்டுகள், கப்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது தடைசெய்யப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், அன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பூ மாலைகள் மற்றும் இந்தியப்ப வத்திகள் அடங்குகின்றது.
இருப்பினும், தயிர் கோப்பைகள் சம்பந்தப்பட்ட தடையில் சேர்க்கப்படவில்லை என்றும் உணவுப் பாத்திரங்களின் கீழ் பொலிஸ்டிரீனால் செய்யப்பட்ட மதிய உணவுப் பெட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தடையை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.