
பாடசாலைக் கல்வியைப் பெறுவதில் ஏற்படும் பாதகமான கல்வி முரண்பாடுகளை நீக்கும் வகையில் ஆரம்பக் கல்வியில் முதலாம் தரத்திற்குச் செல்லும் பிள்ளைகளுக்கு சுமார் ஐந்து வகையான முன்பள்ளிகள் உள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய கல்வி மறுசீரமைப்புடன் இணைந்த கொள்கையை தயாரிப்பது தொடர்பாக கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 15% முன்பள்ளிப் பிள்ளைகள் மாத்திரமே முதலாம் தரக் கல்வி மட்டத்திற்கு இணையான முன்பள்ளிக் கல்வியில் சித்தியடைந்துள்ளனர்.
அதேபோன்று, ஆரம்பக் கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்களும் மிகவும் முறையான ஆசிரியர் பயிற்சியைப் பெற்று அறிவால் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திற்கு ஏற்ற வகையில் மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளையும் இணைத்து ஒரே ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் மூலம் ஆசிரியர்களை பட்டதாரிகளாகப் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி 2028ஆம் ஆண்டுக்குள் பயிற்சியற்ற மற்றும் படிக்காத ஆசிரியர் கல்வித் துறையில் இருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.