
இன்று (02) முதல் பல்பொருள் அங்காடிகளில் தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (01) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நமது நாட்டில் கோழிக்கறி உற்பத்தி செய்யும் அனைத்து தொழிலதிபர்களும், பெரிய அளவில் முட்டை உற்பத்தி செய்யும் அனைத்து தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
அத்தோடு, முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மேலும் 91 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டதுடன் கோழி இறைச்சியின் விலையை குறைக்காவிடின் இந்தியாவிலிருந்தே கோழி இறைச்சியை இறக்குமதி செய்து பாதுகாக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டையில் நம் நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை உயர்வு, நாட்டின் புரதத் தேவைக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் இத்தொழிலை பாதுகாக்கும் வகையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி தோலுடன் கூடிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை இன்று முதல் 1250 ரூபாவாக குறைக்க இணக்கம் காணப்பட்டதுடன் விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், எந்தவொரு சூப்பர் ஸ்டோரிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டால், 0712732679 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்க்கு தெரிவிக்குமாறு நுகர்வோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.