
நாட்டுக்கு வருடாந்த வருமானம் 3.5 பில்லியன் டொலர்களை வழங்க முடியும் என உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் பண்ணைகளில் மாதாமாதம் கால்நடைகள் பெருக்கப்படுவதுடன், கோழிகளை வளர்ப்பதற்கான வசதிகளையும் மேம்படுத்தி வருவதாக கோழிப்பண்ணை தொழில்துறையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மாலைதீவுக்கு மாதாந்தம் இரண்டு கோழி கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், நாட்டில் கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், 2020 ஆம் ஆண்டளவில் கோழி இறைச்சி மற்றும் முட்டையில் நாடு தன்னிறைவு அடைந்திருந்த நிலையிலும் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கால்நடை தீவன விலை அதிகரிப்பு மற்றும் கால்நடை தட்டுப்பாடு காரணமாக குறித்த தொழிலில் சில பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .
எவ்வாறாயினும், கோழி மற்றும் முட்டை கைத்தொழிலை உள்ளுர் கைத்தொழிலாக பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.