
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்தோடு, குறித்த மனுக்கள் முன்னர் பரிசீலிக்கப்பட்ட போது, முதற்கட்ட ஆட்சேபனைகளை தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உரிய மனுவை சட்டத்தின் முன் பராமரிக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், மனுவில், மனுதாரர் தன்னை வாக்காளர் என்று குறிப்பிடவில்லை என்றும், நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் முதற்கட்ட ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.
ஆனால் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, உரிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவு முற்றிலும் சட்டத்துக்கு எதிரானது என வாதிட்டார்.
இதேவேளை, எல்லை நிர்ணய பணிகள் நிறைவடையாத நிலையில் இவ்வாறான தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளதோடு இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் பூர்வாங்க ஆட்சேபனைகளை நிராகரித்ததுடன் இது தொடர்பான மனுவை விசாரிக்க நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தது.
மேலும், மனு மீதான விசாரணையை பெப்ரவரி 14 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.