
இதுவரை இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை என்றும், தற்போது மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் வாகனங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது, ஆனால் இந்த வாகனங்களை பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
அத்தோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உலகில் பல நாடுகள் புதைபடிவ எரிபொருள் அமைப்பில் இருந்து விலகி மின்சார அமைப்பை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத பிற மாற்று ஆற்றல்களுக்கு உலக நாடுகளும் மாற வேண்டிய தேவை இருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
எனவே, 2030ம் ஆண்டுக்குள் போக்குவரத்து முறையை மின்னேற்றமாக மாற்ற பல நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும் மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிப்பிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக மாற்றும்போதும், மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய முச்சக்கரவண்டிகளின் கர்ப் எடை 500 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடைகளை நீக்கி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு கடந்த 08 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேற்படி ஒப்புதலின் பிரகாரம், வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் பஸ்கள் மாத்திரமன்றி புகையிரதங்களையும் மின்சாரத்தில் இயங்கும் புகையிரதங்களாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.