
2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்படும் எனவும்
இவ்வருடம் சில புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இவ்வருடம் தேசிய பல்கலைக்கழக அமைப்பிற்கு 45,000 மாணவர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் குறைந்தபட்ச தகுதி பெற்ற 27% பிள்ளைகள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
21/22 கல்வியாண்டில் மருத்துவ பீடத்திற்கு 2035 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த வருடம் 2085 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பொறியியல் பீடங்களுக்கு அதிகளவான மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.