
போலந்து வதிவிட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, நேற்று (08) மாலை 06.45 மணியளவில் கட்டார் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL- 217 இல் ஏற முற்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,தரகருக்கு 4 மில்லியன் பணம் செலுத்தி போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கிளியரன்ஸ் கவுன்டரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சந்தேக நபரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆவணங்கள் மீதான தொழில்நுட்ப சோதனைகள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.