
2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை (www.ugc.ac.lk) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய கல்வியாண்டில் மொத்தம் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், 2022 (2023) உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை நடைபெற்ற பரீட்சைக்கு 232,797 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 31,136 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்ததோடு முடிவுகள் செப்டம்பர் 04 திகதி வெளியிடப்பட்டது.
இதேவேளை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவின் கருத்துப்படி, 166,938 பரீட்சார்த்திகள் (149,487 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்கள்) பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 16 துய்வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.