
பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது வர்த்தக கூட்டாளிகள் முறைகேடாக சம்பாதித்த நிதியை முதலீடு செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமா அதிபரிடம் இருந்து இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பெப்ரவரி 15 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார்.