
சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் சமச்சீர் சட்டமொன்றை கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (13) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான அலி சப்ரி இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் சமச்சீர் சட்டத்தை கொண்டுவரும் நோக்கத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச அளவுகோல்களுக்கு இணங்க, தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நீதியமைச்சரின் தலைமையில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இந்த புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு எமது நாட்டில் புதிய சட்டமூலங்களையும் சட்டங்களையும் உருவாக்கும் முறைமை காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டதன் பின்னர், நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அது பற்றிய புரிதலைப் பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான’ என்ற புதிய சட்டமூலம் இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுவதுடன் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக முன்வைக்கப்படும் எனவும், அதனை எதிர்த்து நாட்டு மக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.