
ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு சர்வதேச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் குழுவைச் சந்தித்துள்ளார்.
இதன்படி, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை ஜனாதிபதி சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தை உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மிகவும் பாராட்டியுள்ளதோடு இலங்கை புத்தாக்கப் பாதையில் பிரவேசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த பலன்களை விரைவாக அடைய முடியும் என நம்புவதாகவும் இதற்கு உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் எனவும் உலக வங்கியின் தலைவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்வி உள்ளிட்ட பிற பொதுத்துறை சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், அவற்றின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க முடியும் எனவும் இவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் நேரடியாகத் தடையாக இருக்கும் எனவும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே தனக்கு முக்கியமானது எனவும் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த 2 வருடங்களில் இலங்கைக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி உலக வங்கியின் தலைவரிடம் தெரிவித்துள்ளதோடு இலங்கை தற்போது முழுமையான பொருளாதார சீர்திருத்த பாதையில் இறங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் கடனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அடுத்த தசாப்தத்தில் உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும், அதற்காக பொருளாதார சீர்திருத்தங்களை முழுமையாக அமுல்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிடம் அறிவித்துடன் உலக வங்கியின் தலைவரையும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.