
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரகத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள Taj Pierre ஹோட்டலில் சமந்தா பவரை சந்தித்ததாகவும் இதன்போது இருவருக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை இவ்வளவு குறுகிய காலத்தில் செலுத்தும் என்று தான் நினைக்கவில்லை என பங்களாதேஷ் பிரதமர் கூறியதோடு கடனை செலுத்துவதன் மூலம் இலங்கை படிப்படியாக அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் இலங்கை சிறந்த நிலையை அடைய முடியும் என பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த சவாலான காலப்பகுதியில் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.