
தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்கவின் புதிய பதவியில் செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று காலை பிறப்பித்த உத்தரவின் பிரகாரம் இடைக்காலத் தடையுத்தரவு ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்ற நீடிப்பு உத்தரவை எதிர்ப்பதாக தெரிவித்ததையடுத்து, ஆட்சேபனைகளை அடுத்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.