
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த உத்தரவை பிறப்பித்த நீதவான், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணைக் காலத்தில் சாட்சிகள் எவருக்கும் செல்வாக்கு செலுத்தியதாக உண்மைகள் வெளிவராததால், பிரதிவாதி பிணையில் விடுவிக்கப்படுவார் என விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை, தமக்கு எதிராக சுமத்தப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வு பிரிவில் சரணடைந்ததை அடுத்து, செப்டம்பர் 06 ஆம் திகதி சேனாநாயக்க கைது செய்யப்பட்டார்.
மேலும், 38 வயதான அவர், 2020 இல் லங்கா பிரீமியர் லீக் (LPL) முதல் பதிப்பில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, ஆரம்ப எல்.பி.எல் போட்டியில் ஊழல் நடைமுறைகளுக்கு அவர்களைத் தூண்டியதாக ஒரு ஊடக அறிக்கை குற்றம் சாட்டியது.
எவ்வாறாயினும், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, அதே நேரத்தில் அவை தனக்கு அவதூறு பரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்றும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க மறுத்துள்ளார்.