
அரகலய மக்கள் போராட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படாமல் இருந்திருந்தால் வரி அதிகரிப்பு ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, “தற்போதைய எரிபொருள் விலைகள் மற்றும் வரி அதிகரிப்புடன் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைத்துள்ளன. அரகலய அரங்கேற்றப்படாமல், கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடிக்கப்படாவிட்டால், இந்த வரி மற்றும் பயன்பாட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்காது,” என முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைத்த ஒரு தலைவரை ‘போராடடத்தின் மூலம்’ அகற்றியதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களை குற்றம் சாட்டி, மீண்டும் வரி விதிக்காமல், இந்த நிலைமையை எதிர்கொள்ள தேசிய பொருளாதார பொறிமுறையை வலுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட பிரேரணைக்குள் இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.