
தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பதை அறிவார்ந்த மனித வளங்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேர் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய னாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய பொருளாதாரச் சவாலில் இருந்து இலங்கையை விடுவித்து போட்டிப் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்வதற்கு, நாட்டின் மனித வளம் திரட்டப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
அத்தோடு, உலக நிலவரத்தை அவதானித்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நிகழலாம் என்றும் வளர்ந்த நாடுகள் கூட எதிர்காலத்தில் பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி இன்று இந்தப் பட்டங்களைப் பெறும் பிள்ளைகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பார்களா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் 450 இற்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாகவும், இந்தப் பயிற்சி நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளாக மாற்றப்பட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் தொழில் திறன் கொண்ட பிரஜைகளை நாட்டில் உருவாக்க முடியும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.