
05.10.2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற அரசாங்க நிதிக் குழுவில் 6 வர்த்தமானிகள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2329/19 மற்றும் 2342/24 க்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் குறித்த வர்த்தமானிகளின் பிரகாரம் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் இருந்து வரும் எம்பார்கேஷன் வரி 60ல் இருந்து 30 அமெரிக்கா டொலராக குறைக்கப்படும் எனவும் இது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2340/42 இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதோடு இராஜதந்திரி அல்லது இராஜதந்திர அமைப்பினால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சொகுசு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், குறித்த வாகனங்களின் பாவனை காலத்தின் அடிப்படையில் குறித்த வாகனங்களை விற்பனை செய்தல் அல்லது அகற்றினால் விதிக்கப்படும் சொகுசு வரியை அறவிடுவது தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2334/24 இல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்னும் சில மாதங்களுக்குத் திகதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2341/63 இன் ஏற்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டதுடன் தொழில்துறைக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில், உயர்மட்ட தொழில்துறையுடன் தொடர்புடைய உள்ளூர் பெயிண்ட் உற்பத்தியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதற்காக இந்த விதிமுறைகள் முன்வைக்கப்பட்டது.
மேலும், 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2347/08 இல் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளும் பரிசீலிக்கப்பட்டதோடு 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெறுவது அவசியமானது எனவும், இந்த வர்த்தமானி மூலம் அது நீக்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, இந்த நடவடிக்கை குறித்து அரச நிதிக் குழுவில் பரிந்துரைகள் வழங்கப்பட்டதால், இதை செயல்படுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசிதழ்களை பரிசீலித்த பின், அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.