
புதிய மோட்டார் வாகன வருவாய் உரிம முறை, வருவாய் உரிமங்களைப் பெறுதல் அல்லது புதுப்பித்தல் செயல்முறையை எளிதாக்குவது, இன்று (07.) அமுலுக்கு வருவதாக, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஹேரத், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
அத்தோடு, புதிய முறையானது, புதிய வருவாய் உரிமங்களை, ஒருவரின் வீட்டிலிருந்து, ஆன்லைனில் பெற முடியும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
இதேவளை, 2024 மார்ச் 31 ஆம் திகதிக்குள் அனைத்து அரச நிறுவனங்களின் கட்டண முறைமைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், “நாட்டின் பொதுச் சேவையின் செயல்திறனை மேம்படுத்தவும், முறைகேடுகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த பொதுச் சேவையும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். எனவும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அறிக்கையின் ஊடாக இலங்கையில் உள்ள அனைத்து விதமான அரச நிறுவனங்களினையும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்களைத் தெரிவுசெய்து ஒன்பது முன்னோடித் திட்டங்கள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.