
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவர்கள் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், குறித்த நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் பணிப்பெண்கள் இருவர் இல்லாததை அவதானித்ததால், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவர்களை தேடிய நிலையில் அவர்கள் பயன்படுத்திய குளியலறையில் இரு பெண்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டினுள் இருந்த அலமாரியில் இருந்த தங்கம் அல்லாத 12 வளையல்கள், 02 தங்க நெக்லஸ்கள், 01 தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் என்பன திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்கள் 67 மற்றும் 70 வயதுடையவர்கள் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மாத்தறை பொலிஸார், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடைய துடாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறித்த வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.