
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, அலி சாஹிர் மௌலானா செய்யத், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் அஹமட் ஜைனுலாப்தீன் நசீரின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்தப் பதவிக்கு மௌலானாவை நியமித்து, இலங்கை தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை (11) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(1)இன் கீழ் மேற்படி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இந்த வெற்றிடத்தை பத்தி 13 (பி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி நிரப்புமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அலிசாஹிர் மௌலானா செய்யாத், மேற்படி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர், இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ஆவார்.