
நாடு முழுவதும் உள்ள 16 அரச பல்கலைக்கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளில் அங்கு நடந்த ரேக்கிங் சம்பவங்கள் மற்றும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 10, 2023க்கு முன் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 2020 ஆம் ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவர்கள் குழுவொன்று பசிந்து ஹர்ஷன டி சில்வா எனும் முதலாம் வருட மாணவராக இருந்த போது தனக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களினால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட
புவனேக அலுவிஹாரே, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று (11) குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி அவந்தி பெரேரா, குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
அத்தோடு, தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு உரிய அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பிரதிவாதிகளுக்கு அறிவிக்கும் என சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வழக்கின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் (IGP), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோருக்காக சட்டமா அதிபர் தொடர்ந்து ஆஜராவார் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆஜரான தனியார் சட்டத்தரணிகள், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, மனுதாரர் எந்தவித இழப்பீடும் கோரவில்லை என்றும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தொடர் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் இவ்வாறான விடையங்கள் நடக்கக்கூடாது என தனது வாடிக்கையாளர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவ்வழக்கை நவம்பர் 10, 2023 அன்று திரும்பப் பெற உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கொழும்பு, களனி, பேராதனை, வவுனியா, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 16 அரச பல்கலைக்கழகங்கள் இந்த விடயம் தொடர்பான அறிக்கைகளை குறித்த திகதியில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.