
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துடன் கூட்டுப் பொருளாதார சபையொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் அஹ்மத் பின் அலி சயீக் புதன்கிழமை (11) கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் சந்தித்தபோது குறித்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வர்த்தகம், எரிசக்தி மற்றும் சுற்றுலாத் துறைகளில் அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். .
ஏற்றுமதிக்கான உணவுப் பயிர்களின் வளர்ச்சிக்காக புதிய பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விவசாயம் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 300,000 இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய ஆதரவு மற்றும் உதவிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.