
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானில் திறமையான இலங்கை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக ஜப்பானிய நிறுவனமான IM ஜப்பானுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இது தொடர்பான ஒப்பந்தத்தமானது நேற்று புதன்கிழமை (11) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம்.ஹில்மி மற்றும் ஐஎம் ஜப்பான் நிறுவனத்தின் இயக்குநர் மஸ்னோபு கோமியா ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த ஒப்பந்தத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ள அதே நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஐந்து (05) ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் ஐஎம் ஜப்பான் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஜப்பானிய மொழிப் பரீட்சைகளை நடத்துவதற்கான இலங்கையில் பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.